முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது... தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் நடவடிக்கை!!

By Narendran SFirst Published Feb 25, 2022, 9:14 PM IST
Highlights

ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில், சென்னையில் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தாக்கப்பட்ட திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்பின்னர், மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,  புழல் சிறைக்கு  மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.  இதனை விசாரித்த நீதிபதி முரளிகிருஷ்ணன், ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்.

வேணுமெனில் போலீசார் சிறையிலே சென்று விசாரிக்கலாம் என்று தெரிவித்திருந்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே முன்னாள் அமைச்சர் மகள் ஜெயப்பிரபா, அவரது கணவர் நவீன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக தெரிவிக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். 

click me!