தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அடக்கம் தேமுதிக அலுவலகத்தில் நடைபெற ஒப்புதல் அளித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் காலமானார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக மக்களை மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. ஆனால் விஜயகாந்தின் உடலை பார்க்க தமிழகம் முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டனர்கள், ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து கோயம்பேடு பகுதி முழுவதும் கடும் நெரிசலாக காணப்பட்டது. சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த முடியாத நிலை நீடித்தது. இதனையடுத்து இன்று அதிகாலை விஜயகாந்தின் உடல் சென்னை தீவு திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் நிறைவேறிய தீர்மானம்
தீவு திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தில் உடலை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். இன்று மதியம் 1 மணி அளவில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக கொண்டு சென்று தேமுதிக அலுவலகத்தில் முழு அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில் சென்னையை பொறுத்தவரை உயிர் இழந்தவரின் உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி சார்பாக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே தான் அடக்கம் மற்றும் எரியூட்டம் முடியும்.
இந்தநிலையில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்ய அனுமதி இல்லாத நிலையில், இன்று சென்னை மாநகராட்சி கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்