பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு… மீறினால் வழக்குபதிவு என எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்!!

By Narendran SFirst Published Oct 29, 2021, 7:23 PM IST
Highlights

தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வருகின்ற 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு உறபத்தி மற்றும் விற்பனை சூடுப்பிடித்துள்ளது. மேலும் மக்கள் புத்தாடைகள் எடுக்க கடைகளுக்கு படை எடுத்துள்ளனர். குறிப்பாக தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன் முளைக்கும் சிறிய பட்டாசு கடைகளும் விற்பனைக்காக பட்டாசுகளை வாங்கி குவித்து வைத்துள்ளனர். இது ஒருபுறமிருக்க சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆகவே நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை அன்று சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், சென்னையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். அதே போல, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோயம்பேடு, தியாகராய நகர், வளசராவாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும்  அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தாலோ, அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடித்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக எச்சரிக்கைவிடுத்தார். இதுமட்டுமின்றி பேருந்து, ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தீபாவளி பண்டிகையன்று மக்கள் அதிகம் கூடும் பகுதியில் செல்லும் பெண்கள், தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை பாதுகாப்பான முறையில் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  கடந்த ஆண்டு தீபாவளியின் போது விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,168 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 160 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. அதற்கு அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 160 வழக்குகள் பதியப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!