
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்ததாக, சென்னை பர்மா பஜாரில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் முகமது இக்பால்(வயது 32). இவர் சொந்தமாக செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. இவரின் வியாபாரம் பெரும்பாலும் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதாக இருந்தது.
இந்நிலையில், முகமது இக்பால், ஐ.எஸ். அமைப்புக்கு நிதி உதவி அளித்ததாக உறுதியான ஆதராங்கள் கிடைத்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திரா தமிழக எல்லையான ராஜமுந்திரி அருகே ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு படையினர்(ஏ.டி.எஸ்.) கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்து கடந்த 2014ம் ஆண்டு பெங்களூருவில் கைதான முதல் நபரான மேதி மஸ்ரூருடன் முகமது இக்பாலுக்கும் தொடர்பு இருந்து தெரியவந்தது. இந்தியாவில் இருந்து “டிராவல் ஹக்” என்ற வளைதளத்தை உருவாக்கிய முகமது இக்பால் ஐ.எஸ். அமைப்பு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார்.
மேலும், தனது வியாபாரம் நிமித்தமாக மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர், மெக்கா, மெதினா ஆகிய நாடுகளுக்கு பல முறை சென்றுள்ளார், குறிப்பாக சீனாவுக்கு 8 முறை முகமது இக்பால் பயணித்துள்ளார். அப்போது ஐ.எஸ். தீவிரவாதிகளான சூடானைச் சேர்ந்த அபு சாத் அல் சூடானி, சோமாலியாவைச் சேர்ந்த அபு ஒசாமா அல் சோமாலி ஆகியோருடன் முகமது இக்பாலுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதில் அபு சாத் அழைப்பின் பெயரில், முதல்முறையாக துருக்கி வழியாக சிரியாவுக்கும், 2-வது முறையாக பிரான்ஸ் வழியாக துருக்கி சென்று சிரியாவுக்கும் முகமது இக்பால் பயணித்துள்ளார். அங்கு ஐ.எஸ். அமைப்பில் போர் பயிற்சி பெற்ற இக்பால், படைப்பிரிவில் சேர முயன்றும் முடியவில்லை. இதையடுத்து, ஐ.எஸ்.அமைப்பினர், முகமது இக்பாலை தங்களுக்கு நிதி திரட்டித் தருமாறு திருப்பி அனுப்பிவிட்டனர் என்று ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
அதன்பின் இந்தியாவில் வந்த முகமது இக்பால், 4 முறை இந்தியாவில் இருந்து வெஸ்ட்ரன் யூனியன் மூலமும், சீனிவில் இருந்து ஒரு முறையும் ஐ.எஸ். அமைப்புக்கு லட்சக்கணக்கில் நிதி திரட்டி அனுப்பி உள்ளார். இந்த நிதியை தனது பெயரில் அனுப்பாமல், துபாயைச் சேர்ந்த ஜமீல் அகமது என்பவர் மூலம் ஹவாலா பணமாக அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
அதன்பின், நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், துபாயில் ஒரு நிறுவனத்தில் பணியாள்ளி வந்த ஜமீல் அகமதுவையும் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பரிவிரினர் கைது செய்தனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட முகமது இக்பாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்ட தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் உதவி செய்து இருப்பது தெரியவந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டிய ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவினர், நேற்று சென்னை வந்தனர்.
ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்ட உதவிசெய்ததாக குற்றம்சாட்டி சென்னை, வார்டாக்ஸ் சாலை, சர்காரியா தெருவைசேர்ந்த, முகமது அலி ஜின்னா என்பவரின் மகனான ஹாரூன் ரசீத்(வயது 36) என்பவரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பரிவினர் கைது செய்தனர்.
இவர் பர்மாபஜாரில் செல்போன், எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரைப் போல் பலர் சென்னை மற்றும் தமிழகத்தில் இருந்து ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்ட உதவி இருப்பதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கு தெரியவந்துள்ளது. முதலில் ஹாருன் ரசீத்திடம் விசாரணை நடத்தியபின், அடுத்த கட்டமாக பலர் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட ஹாரூன் ரசித்தை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி, டிரான்சிஸ்ட் வாரண்ட் அடிப்படையில் ராஜஸ்தான் அழைத்து செல்லப்படுவார் எனத் தெரிகிறது.