இதெல்லாம் ரொம்ப தப்பு முதல்வரே.! சொன்ன மாதிரியே பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவாங்க! திமுக கூட்டணி கட்சி

Published : Dec 30, 2025, 02:50 PM IST
teacher

சுருக்கம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததாலும், அரசு அமைத்த குழுவின் தாமதத்தாலும் ஏமாற்றமடைந்த ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்ற ஆசிரியர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என திமுக கூட்டணி கட்சி தலைவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி அன்று அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்து ஜூன் 1-ஆம் தேதி அன்று பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நாள் வித்தியாசத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இடையே ரூ.3,170 ஊதிய வேறுபாடு உள்ளது. அதாவது, கடந்த 2009 ஜூன் 1ம் தேதிக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8370 வழங்கப்படுகிறது. அதே சமயம் அந்த தேதிக்கு பிறகு 2009ல் நியமிக்கபட்டவர்களுக்கு ரூ.5200 வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக, சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாடுகளை களைய கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்ற ஆசிரியர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை இந்த பிரச்சனைக்கு முடிவு எட்டப்படவில்லை என்பது, இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகி இருக்கிறது.

மேலும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இது தொடர்பாக ஆய்வு செய்ய 2023 ஜனவரி 1 அன்று, மூன்று பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழு இதுவரை மூன்று முறை மட்டுமே கூடி கருத்துகளைக் கேட்டுள்ளது. ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டிய இந்த பிரச்சினையை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பது ஆசிரியர்களின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிரியர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், பணி நிரந்தரம் செய்தல், ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு போராட்டத்தை கலைக்க பேச்சுவார்த்தை நடத்துவது, காவல்துறையின் மூலம் போராட்டங்களை ஒடுக்குவது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம்.. திமுக அரசுக்கு எதிராக பொங்கியெழுந்த கார்த்தி சிதம்பரம்!
அமித் ஷா போட்ட ஸ்கெட்ச்..! கதறும் தலைவர்கள்..! தமிழக பாஜகவில் யாருக்கு சீட்..?