மத்திய அரசு நலத்திட்டங்களால் இந்தியாவில் மாற்றம்: ராம சீனிவாசன்!

By Manikanda Prabu  |  First Published Jun 9, 2023, 5:53 PM IST

மத்திய அரசு நலத்திட்டங்களால் இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என மாநில பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்


பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களால் இந்தியாவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மாநில பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு பேரியக்க நிகழ்ச்சியையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்து பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி தனது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சவால்கள் பிரச்சினைகளை சந்தித்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளார் . இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்கள் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயன் அடைந்துள்ளனர். பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டு ஆட்சி காலத்தில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 6000 வழங்கி வருகிறார். ஆனால் தமிழக அரசு ஏழை மக்களுக்கு பொங்கல் இனாம் வழங்கி ஏமாற்றி வருகிறது.” என சாடினார்.

இவ்வளவுக்கும் திமுகதான் காரணம்: லிஸ்ட் போட்ட நாராயணன் திருப்பதி!

சீனாவை விட இரண்டு மடங்கு டிஜிட்டல் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு விமர்சனங்களை தாண்டி மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வழங்கிய சீனாவுக்கு இந்தியா இலவச மருந்து மற்றும் உணவுப்பொருள் வழங்கியது. கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து 38 மாதங்கள் இலவச உணவு வழங்கி பொதுமக்களை காப்பாற்றி உள்ளார்.” என்றார்.
தொடர்ந்து பேசிய ராம சீனிவாசன், “மத்திய அரசு சார்பில் விருதுநகரில் ரூபாய் 2000 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கியுள்ள ஜவுளி பூங்காவை திமுக தனது திட்டம் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீட்டுக்காக ஜப்பான் சென்றுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம்.” என்றார்.

இந்தியாவின் பெருமையை வெளிநாடுகளில் ராகுல் காந்தி தரக்குறைவாக பேசி விமர்சித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், “ புதிய பாராளுமன்ற கட்டிடத்தை 19 எதிர்கட்சிகள் புறக்கணித்தனர். அவர்கள் மறுபடியும் பாராளுமன்றத்தில் அமர்வதற்கு வாய்ப்பு கிடைக்காது. இந்திய அளவில் பாஜகவை எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் நிலைமை காமெடியன்கள்  போன்று உள்ளது. பிரதமர் மோடி மீது வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்து வருகின்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. ஆனால் அதே வேளையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பினால் உடனடியாக பாஜக கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்படுவது கண்டனத்துக்குரியதாகும்.” என்று குற்றம் சாட்டினார்.

“மதுரை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 2000 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

click me!