Tamilnadu Rain:அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் எந்தெதந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு? சென்னையின் நிலை என்ன?

By vinoth kumarFirst Published Apr 16, 2024, 2:42 PM IST
Highlights

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதையும் படிங்க: School College Holiday: குட்நியூஸ்.! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 18ம் மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20ம் முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

இன்று முதல் 20ம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° - 3° செல்சியஸ் உயரக்கூடும். இன்று முதல் நாளை வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°- 40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

18ம் தேதி முதல் 20ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°-41° செல்சியஸ் இருக்கக்கூடும்.

இதையும் படிங்க: மீண்டும் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? லிஸ்ட் போட்டு பட்டையை கிளப்பும் வானதி சீனிவாசன்.!

ஈரப்பதம்:

இன்று முதல் 20ம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!