இந்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் தரமான சம்பவம் இருக்காம்.. குட்நியூஸ் சொன்ன கையோடு ஷாக்கிங் நியூஸ் வானிலை மையம்

By vinoth kumar  |  First Published Mar 31, 2024, 3:05 PM IST

நாளை மற்றும் ஏப்ரல் 2ம் தேதி தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Latest Videos

நாளை மற்றும் ஏப்ரல் 2ம் தேதி தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 3ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 

இன்று முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 4 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!