
சென்னையில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. விருகம்பாக்கம் மற்றும் வடபழனியில் நடந்து சென்ற பெண்களிடம் மர்மநபர்கள் செயின்களை பறித்து சென்ற சம்பவம், பெண்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் சாந்தி காலணியை சேர்ந்த 65 வயது பெண்ணான மேகலை என்பவர், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். கோவில் அருகே மேகலை சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அந்த பெண் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்து சென்றனர். அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் காத்துக்கொண்டிருந்த அவர்கள் இருவரும், அந்த பெண் வந்ததும் வேகமாக வாகனத்தை ஓட்டி செயினை பறித்து சென்றனர். இந்த காட்சி, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராணி என்ற 40 வயது பெண், நேற்று காலை அவரது வீட்டருகே உள்ள கவரைத்தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள், ராணி அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.