செய்யாற்றில் அதிகபட்சமாக 104.5 மிமீ மழை…

Asianet News Tamil  
Published : Dec 14, 2016, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
செய்யாற்றில் அதிகபட்சமாக 104.5 மிமீ மழை…

சுருக்கம்

கண்ணமங்கலம்,

வர்தா புயல் காரணமாக செய்யாற்றில் அதிகபட்சமாக 104.5 மிமீ மழை பதிவாகியது. மேலும், பெரும் மழையால் கண்ணமங்கலம் நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘வார்தா’ புயல் திங்கள்கிழமை கரையை கடந்தது. அப்போது கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பெரும் மழை பெய்தது.

திங்கள்கிழமை மதியம் முதல் நள்ளிரவு வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், பகல் நேரத்திலே முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பெரும் மழை காரணமாக கண்ணமங்கலம் பகுதியில் ஓடும் நாகநதியில் திங்கள்கிழமை முதல் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இருபக்க கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.

கடந்த ஆண்டு பெய்த மழைக்கு பிறகு இப்போது ஆற்றில் வெள்ளம் ஓடுவதாக அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர்.

மேலும், கண்ணமங்கலம், சந்தவாசல், படவேடு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ரூ.20 இலட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அதேபோன்று போளூர் பகுதியிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. போளூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் பனைமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மின்கம்பம் ஒன்றும் முறிந்து விழுந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒரு மரமும் விழுந்தது.

போளூரை அடுத்த எடப்பிறை கிராமத்தில் வேப்ப மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. அப்போது அதன் அருகில் நின்ற மாட்டு வண்டி மீது மரம் விழுந்ததால் மாட்டு வண்டி சேதமடைந்தது. ஏந்தல் கிராமத்தில் லலிதா என்பவருடைய கூரை வீடும் சேதமடைந்தது.

திருவண்ணாமலை நகரிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

செய்யாறு– 104.5, ஆரணி– 96.7, வந்தவாசி– 68, திருவண்ணாமலை– 39.4, போளூர்– 39.2, செங்கம்– 26.2, சாத்தனூர் அணை– 20.6.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!
விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!