
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து பதில் அளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு பொதுநல வழக்கு மையத்தின் மேலாண்மை அறங்காவலர் கே.கே. ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக தினமும் 10 பேர் உயிரிழந்து வருவதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரியும் மனுவியில் கே.கே. ரமேஷ் கூறியிருந்தார்
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது., மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, டெங்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இம்மாதம் 24 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இம்மாதம் 24 ஆம் தேதி அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்தது.