சூரிய சக்தி மின்சார திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 ஆயிரம் மானியம் வழங்குகிறதாம் - ஆட்சியர் அழைப்பு...

First Published May 18, 2018, 7:55 AM IST
Highlights
Central Government to grant Rs.18 thousand subsidy for solar power project - Collector announced


கரூர்

சூரிய சக்தி மின்சார திட்டத்தின் கீழ் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த மத்திய அரசு ரூ.18 ஆயிரம் மானியம் வழங்குகிறது என்று மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் மூலம் மத்திய அரசின் 30 சதவிகித மானியத்துடன் கூடிய சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியது:

"சூரிய சக்தி மின்சார திட்டத்தின் கீழ் மானியம் பெற தகுதியுடையவர்களான தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டிடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 

மருத்துவமனைகள் மற்றும் தனியார் விடுதிகள் ஆகிய கட்டிடங்களில் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் வழங்குகிறது. இதனை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் கீழ் பெற்றுக்கொள்ளலாம். 

இந்தத் திட்டத்தில் 1000 வாட் முதல் 5000 வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனத்தை அமைத்துக் கொள்ளலாம். 1000 வாட் சூரிய சக்தி மின்சார அமைப்பின் மூலம் ஒரு நாளுக்கு 4 யூனிட் முதல் 4.5 யூனிட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதற்கான விலை ரூ.60 ஆயிரம் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு 30 சதவிகிதம் ரூ.18 ஆயிரம் மானியம் வழங்குகிறது. 

சூரிய சக்தி மின்சாரத்தை அமைப்பவர்களுக்கு உபயோகப்படும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரம் மின்வாரியத்திற்கு அனுப்பப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவது குறைக்கப்படுகிறது. மின்சாரம் சேமிக்கப்படுகிறது. பராமரிப்பு செலவு மிகவும் குறைவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் கார்டு நகல், மின்கட்டண ரசீது நகல், 1 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் உதவி பொறியாளரை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி பொறியாளர் (தமிழ்நாடு எரிசக்தி முகமை) மற்றொரு செந்தில், தனியார் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களது உரிமையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.  

click me!