சென்னை வந்தது மத்திய நிபுணர் குழு : 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் புயல் சேதம் குறித்து ஆய்வு!

First Published Dec 28, 2016, 11:10 AM IST
Highlights


வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், புயல் சேதங்களை மதிப்பீடு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க, மத்திய நிபுணர் குழு சென்னை வந்தது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 12-ம் தேதி வர்தா புயல் கடுமையாக தாக்கியதால், பெரும் சேதங்கள் ஏற்பட்டன.  போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டதையடுத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. 

இந்நிலையில், புயல் சேதங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்ய, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் திரு. பிரவீன் வசிஷ்டா தலைமையில், மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையைச் சேர்ந்த இயக்குநர் திரு. கே. மனோசரண், மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை உதவி இயக்குநர் திரு. R.B.Kaul உட்பட, 9 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழு தமிழகம் வரவிருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய குழுவினர் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தனர். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதியில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், புயல்காற்றில் அடியோடு சாய்ந்து விழுந்த மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றையும் பார்வையிடுகிறார்கள். இன்று மாலை, காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குச் சென்று, அங்கு நிகழ்ந்த சேதங்களை ஆய்வு செய்கிறார்கள். 

நாளை, சென்னை ராயபுரம் கடலோரப் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மீன்பிடி கட்டமைப்புகளை பார்வையிடுகிறார்கள். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று, கல்லுக்கடைமேடு, வெள்ளோடை, சின்னாம்பேடு, சோழவரம், சோத்துப்பெரும்பேடு, அறுமந்தை, சீமாவரம், பெரியமுல்லைவாயல், மடியூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், குடிசைகள், விவசாய நிலங்கள், வயல்வெளிகள், வாழை மற்றும் மாந்தோப்புகள் ஆகியவற்றை மத்திய குழுவினர் நேரில் பார்வையிடுகிறார்கள். அன்று மாலை சென்னை திரும்பி, தலைமைச் செயலகத்தில், தமிழக அரசு தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்துகிறார்கள். 

இதனைத் தொடர்ந்து, மத்திய குழுவினர் டெல்லி சென்று, தமிழக புயல் சேதங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விரிவான அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் அளிப்பார்கள்.

click me!