ஐட்ரோகார்பனை காவிரிப் படுகையில் எடுக்கும் மத்திய அரசு, கங்கை படுகையில் ஏன் எடுக்கவில்லை? சீமான் நறுக்…

Asianet News Tamil  
Published : Jul 13, 2017, 08:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
ஐட்ரோகார்பனை காவிரிப் படுகையில் எடுக்கும் மத்திய அரசு, கங்கை படுகையில் ஏன் எடுக்கவில்லை? சீமான் நறுக்…

சுருக்கம்

central government take hydrocarban in cauveri why not in Gangai Seeman

புதுக்கோட்டை

ஐட்ரோகார்பனையும், மீத்தேனையும் காவிரிப் படுகையில் எடுக்க முயற்சிக்கும் மத்திய அரசு, கங்கை படுகையில் இருக்கும் மீத்தேன், ஐட்ரோகார்பன் போன்ற எரிவாயுக்களை ஏன் எடுக்கவில்லை என்று நெடுவாசல் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனைக் கண்டித்து நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தைத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே நடைபெற்ற போராட்டத்தில், ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு முழக்கங்களாய் எழுப்பினார்கள்.

இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக் களத்தின் அருகே நடைபெற்றக் கூட்டத்தில் சீமான் பேசினார்.

அவர் பேசியது:

“கதிராமங்கலம், நெடுவாசல் என போராட்டத்தை பிரித்து பார்ப்பதால்தான் போராடும் மக்களை தனித்தனி குழுக்களாக பார்க்கின்றனர். அதனால் போராட்டம் தமிழகத்தின் போராட்டமாக மாறவில்லை.

நீர் என்பது அனைத்து உயிரினங்களின் தேவை. அதை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. வறட்சியில் வளரக்கூடிய பனைமரம் கூட தற்போது தமிழகத்தில் அழிந்து வருகிறது என்றால், தமிழகம் பாலைவனமாக மாறுகிறது என்று அர்த்தம்.

ஐட்ரோகார்பனையும், மீத்தேனையும் காவிரிப் படுகையில் எடுக்க முயற்சிக்கும் மத்திய அரசு, கங்கை படுகையில் இருக்கும் 25 சதவீதம் மீத்தேன், ஐட்ரோகார்பன் போன்ற எரிவாயுக்களை ஏன் எடுக்கவில்லை.

மக்களின் கருத்துக்களை கேட்டுத்தான் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மத்திய மந்திரி சொல்கிறார். இங்கே மூன்று மாதங்களாக போராடும் மக்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பது மத்திய மந்திரிக்கு தெரியவில்லையா?

ஐட்ரோகார்பன் திட்டம் ரத்தாகிவிட்டது என்ற செய்தி வரும் வரை தொடர்ந்து போராட வேண்டும். போராட்டத்தை விட அதிகாரத்திற்கே பலம் அதிகம். அதனால் அதிகாரத்தை பிடித்துவிட்டு இதுபோன்ற திட்டங்களை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டுவோம்.

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் பிரச்சனையில் வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்க முடியாது. அனைத்துக் கட்சிகளும் கூடி ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதித்து சட்டசபையில் வலுவான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!