
விருதுநகர்
மாவட்ட திட்டப்பணி செயல்பாட்டினை மத்திய அரசு அதிகாரிகள் கண்காணிக்கும் புதிய அணுகுமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் செயலாகும், மாநில உரிமைகலில் மத்திய அரசு தலையிடும் அத்துமீறலாகவும் பார்க்கப்பட்டு வந்ததற்கு மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
வழக்கமான நடைமுறையில் மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வி, விவசாயம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்தத் துறைகள் சார்ந்த திட்டங்களை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தத் திட்டப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில அரசின் முதன்மை செயலாளர் இடத்தில் உள்ள அதிகாரி நியமிக்க்கபடுவார். அவர் பேரில் அவ்வப்போது ஆய்வு நடத்தி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் கலந்தாய்வு நடத்துவார்.
மேலும், திட்டப் பணிகளில் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படா வண்ணம் வேலைகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துவார்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வீட்டு வசதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.
தமிழகத்தில் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்றவுடன் அவர் கோவை மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டதுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்த புதிய அணுகுமுறைக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சிகள், ஆளுநரின் இந்த அணுகுமுறையை விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு, மாவட்ட அளவிலும் திட்டப் பணிகளை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகளை நியமித்துள்ளது.
இதற்கு காராணம், "அடிப்படையில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.
மேலும், நாடு முழுவதும் பின்தங்கிய மாவட்டங்களாக 115 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு.
இந்த மாவட்டங்களில் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய அரசில் கூடுதல் செயலாளராக பணியாற்றும் பிரவீன்குமார் மற்றும் இணை செயலாளராக பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை நியமித்துள்ளது. இவர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற மாநில அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சந்தோஷ்பாபு, அமுதா ஆகியோரையும் நியமித்துள்ளது.
மத்திய அரசு அதிகாரி பிரவீன்குமார் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் அறிவுரைப்படி இந்தக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரவீன்குமார், "ஐந்து ஆண்டுகளில் இந்த மாவட்டத்தை முற்றிலும் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றுவதுதான் இந்த புதிய அணுகுமுறையின் நோக்கம் என்றும், இதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ்பாபுவும் கலந்து கொண்டார். அவரும், "அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது உள்ள இடைவெளியே கண்டறிந்து அது தொடர்பான விவரங்களை சேகரித்து நலத்திட்டங்கள் முழுமையாக சென்று சேருவதற்கு வழி வகை செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.