
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா? என ஆய்வு செய்யப்படும் என சென்னை வந்துள்ள மத்திய குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இறப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து மருத்துவர்கள் அசுதோஷ் பிஷ்வாஸ், சுவாதி துப்லிஸ், கவுஷல் குமார், கல்பனா பர்வா மற்றும் வினய் கர்க் ஆகியோர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுவில் உள்ள மருத்துவர் அசுதோஷ் பிஷ்வாஸ், டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா? என்பது குறித்தும் டெங்கு நோயாளிகள் இறப்புக்கு என்ன காரணம் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.
டெங்குவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் குடிநீரை சேமிக்கும் முறை, மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் அசுதோஷ் பிஷ்வாஸ் வலியுறுத்தினார்.