சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், நவீன் பட்நாயக் ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முதலில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்: மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களைச் சொல்வதற்கான வலிமை குறைகிறது. இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. ஆனால், நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது நமது பிரதிநித்துவம் குறைவது என்பதை நம்முடைய அரசியல் வலிமையை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும். இது வெறும் எண்ணிக்கையை பற்றியது மட்டுமல்ல இது நமது அதிகாரம் நமது உரிமைககள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களை பற்றியது என்றார். இதனையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதை அடுத்து காணொலி மூலம் ஓடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரையாற்றினார்.
இதையும் படிங்க: இது எண்ணிக்கை பற்றியது அல்ல! அதிகாரத்தை பற்றியது! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
அப்போது பேசுகையில்: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை தீர்மானிக்க கூடாது. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களிலையே மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தென் மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் பெரும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது. பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது.
2026 மக்கள் தொகையின் படி தொகுதிகள் சீரமைக்கப்பட்டால் மக்களவை சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும். ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜூ ஜனதாதளம் போராடும். பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது என்றார். இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று நவீன் பட்நாயக் கூறினார்.