வாங்காத ரேசன் பொருட்களுக்கும் செல்போன் மெசேஜ்; ஸ்மார்ட் கார்டு வந்த பிறகும் தொடரும் சூப்பர் குளறுபடிகள்...

First Published Jun 21, 2018, 6:48 AM IST
Highlights
Cell phone message for not buying rations products messing up after the smart card arrives ...


நீலகிரி

ரேசன் கடைகளில் வாங்காத ரேசன் பொருட்களுக்கு வாங்கிவிட்டதாக செல்போன் மெசேஜ் வருகிறது என்று குடும்ப அட்டைதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஸ்மார்ட் கார்டு வந்தபிறகும் குளறுபடிகளுக்கு தீர்வு வந்த பாடில்லை என்று மக்கள் நொந்துக் கொள்கின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகைமண்டலம், குன்னுார், மஞ்சூர், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் தாலுகாக்களில் மொத்தம் 404 ரேசன் கடைகள் உள்ளன. இவற்றில் 2 இலட்சத்து 10 ஆயிரத்து 179 ரேசன் கார்டுகள் உள்ளன. 

இதில், 6 இலட்சத்து 48 ஆயிரத்து 63 வாடிக்கையாளர்கள் அத்தியாவாசியப் பொருட்களை பெற்று பயனடைகின்றனர். மீதமுள்ள 6 இலட்சத்து 27 ஆயிரத்து 572 ரேசன் கார்டுகள் ஆதார் கார்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2 இலட்சத்து 5 ஆயிரத்து 735 கார்டுதாரர்களுக்கு செல்போனில் மெசேஜ் செல்கிறது. 

வாடிக்கையாளர்கள் ரேசன் கடைகளில் ஒவ்வொரு முறையும் பொருட்களை வாங்கும்போது 'ஸ்மார்ட்' கார்டுகள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. அப்போது வாடிக்கையாளர்கள், சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட சில பொருட்களை மட்டுமே வாங்குகின்றனர். ஆனால், பதிவின்போது இவர்கள் அரிசி உள்ளிட்ட அனைத்து ரேசன் பொருட்களையும் வாங்கிவிட்டதாக ரேசன் கடைகளில் பதிவு செய்யப்படுகிறது. 

மேலும், அரிசி வழங்கும்போது 24 கிலோ கேட்டால் '16 கிலோ நல்ல அரிசி; மீதம் கொட்டை அரிசியும் வழங்கப்படும்' என்று கடைக்காரர்கள் கூறுகின்றனராம். இதனால், பெரும்பாலானோர் வெறும் 16 கிலோ நல்ல அரிசியை மட்டுமே வாங்கி செல்கின்றனராம். 

ஆனால், ரேசன் கடைக்காரர்கள் மீதமுள்ள 8 கிலோவையும் வாடிக்கையாளர்கள் வாங்கிவிட்டதாக கணக்கு பதிகிறார். இப்படி வாடிக்கையாளரின் 'செல்போன்' எண்ணுக்கு வரும் மெசேஜில் அனைத்து பொருட்களும் வாங்கிவிட்டதாக வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது, நீலகிரியில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், எஸ்டேட்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும், உள்ளூரில் உள்ள ரேசன் கடைகளுக்கு வந்து, அத்தியாவசிய பொருட்களை 'விலை' கொடுத்து வாங்கி செல்வது அதிகரித்துள்ளது. இதனால் மறைமுகமாக பலருக்கு வருமானம் அதிகரித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் 107 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என்று ஒவ்வொரு ரேசன் கடையிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த புகார் எண் எழுதியிருப்பதே தெரியாத அளவுக்கு சின்னதாக இருக்கும். 

மேலும், இந்த எண்ணில் புகார்கள் தெரிவித்தால் சென்னையில் இருந்து சம்மந்தப்பட்ட தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்படுவதை செயலில் ஒன்றையும்  காணோம்
 
இதுகுறித்து தாலுகா பொது விநியோக திட்டத்தின் கண்காணிப்பு குழு உறுப்பினர் மனோகரன், ''பல ரேசன் கடைகளில், ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி காசு பார்க்கும் வேலை நடந்து வருகிறது. ரேசன் அரிசி கிலோவுக்கு 8 ரூபாய் என விற்பனை செய்யப்படுவதால், இவற்றை வடமாநில தொழிலாளர்கள் 50 கிலோ 400 ரூபாய் கொடுத்து வாங்கி செல்வது பல ரேசன் கடைகளில் சாதாரணமாக நடந்து வருகிறது.

வாங்காத பொருளுக்கு 'ஸ்மார்ட் கார்டில்' பதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை நிரூபிப்பதற்கு கார்டுதாரர்களிடம் ஆதாரங்கள் இல்லாததால், பல ரேசன் கடைக்காரர்கள் அதன்மூலம் நன்றாக பயன்பெற்று வருகின்றனர். 

நுகர்வோர் சட்டப்படி 'பொருட்களுக்கு ரசீது வழங்க வேண்டும்' என்ற விதிமுறையை அரசு நிர்வாகமே கடைபிடிக்காமல் இருப்பது முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாக அமைந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். 

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரிகள், "பெரும்பாலான புகார்கள் குறித்து விசாரிக்கும்போது, குடும்ப அட்டை தாரார்களிடம் வேலையாட்கள் வாங்கி சென்றுவிட்டதாக கூறி விடுவதால், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. 

அதேநேரத்தில் புகார்களின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடைகள் குறித்து மக்கள் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். 


 

click me!