காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து உடனே செயல்படுத்த வேண்டும் - விவசாயிகள் வெளிநடப்பு போராட்டம்...

First Published Mar 29, 2018, 6:36 AM IST
Highlights
Cauvery management board should be set up immediately - Farmers walk out protest


நாமக்கல்

மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று கோரி நாமக்கல்லில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி தங்கவேல், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு அறிவிக்கும் ஆதார விலையை வழங்குவதில்லை. 24 தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1433 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளன.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை ரூ.65 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு தரவேண்டிய பணத்தை வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. 

இதனால் அரசு அறிவித்த விலையை வழங்க மறுக்கும், தனியார் சர்க்கரை ஆலை மீது வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று ஆட்சியரிடம் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் நல்லாக்கௌண்டர், "12 மாவட்டங்களின் விவசாயம், 20 மாவட்டங்களின் குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு. எனவே, மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து செயல்படுத்த வேண்டும். 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 192 டி.எம்.சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று கூறினார். 

பின்னர், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்த அவர், விவசாயிகள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். 

இதனைத் தொடர்ந்து சுமார் 90 சதவீத விவசாயிகள் கூட்டரங்கில் இருந்து வெளியேறினர். பின்னர் கூட்டரங்கிற்கு வெளியில் திரண்ட விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இந்தப் போராட்டம் சுமார் ஐந்து நிமிடங்கள் நீடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளார்கள், விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியில் அழைத்துச் சென்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்ததும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காவலாளர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, நாமக்கல் உதவி ஆட்சியர் கிராந்திகுமார், வேளாண்மை இணை இயக்குனர் கந்தசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

click me!