காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்படி செய்யலாம் - பிளான் போடும் வேல்முருகன்...

First Published Mar 23, 2018, 6:33 AM IST
Highlights
Cauvery management board can be set up this way - velumurugan ...


தருமபுரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிட்டால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை பூட்டுப்போடும் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுக்கலாம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் அதன் நிறுவனர் தி.வேல்முருகன் பங்கேற்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு, மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும். 

மேலாண்மை வாரியம் தவிர்த்து வேறு பெயர்களில் அமைப்பதால் எவ்வித பயனும் தமிழகத்துக்கு கிடைக்காது. இது காலம் தாழ்த்துகிற நடவடிக்கையாகும். எனவே, காவிரி மேலாண் வாரியம் அமைப்பதன் மூலமே காவிரியில் தமிழகத்துக்கான உரிமையைப் பெற முடியும். 

இது தொடர்பாக கடிதம் எழுதுவதால் எவ்வித பயனும் தமிழகத்துக்கு ஏற்படாது. மாறாக, மத்திய அரசுக்கு உண்டான வரியை செலுத்த மறுப்பது உள்ளிட்ட நெருக்கடிகளைத் தரலாம்.

விளைநிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் அமைக்கும் திட்டத்தை விவசாயிகளின் நலன் கருதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால், தற்போது, தமிழக அரசு இந்த விவகாரத்தில் மெளனம் காக்கிறது. 

இதேபோல, ஜெயலலிதா எதிர்த்த நீட், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தற்போது மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் ஆதரவு அளிக்கின்றனர்.

தமிழகத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று போராடுவோரை காவல் துறையினர் கைது செய்கின்றனர். நெல்லையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ரத யாத்திரையை எதிர்ப்போரை மட்டும் கைது செய்தனர். ஆனால், ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக செல்வதற்கு மட்டும் எப்படி அனுமதி அளித்தனர்.

தடை உத்தரவு என்றால் அனைவருக்கும் பொதுவாக பொருந்துவது. எனவே, இந்த விவகாரத்தில், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிய வேண்டும். 

பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த எச். ராஜாவை கைது செய்யாததன் விளைவாக மீண்டும் மீண்டும் பெரியார் சிலைகள் உடைக்கப்படுவது தொடருகிறது.

உச்சநீதிமன்றம் கூறிய காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை பூட்டுப்போடும் போராட்டம் நடத்தலாம் என்று அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், அமைப்புகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
 

click me!