வங்கிகளுக்கு வழங்கப்படும் பண விவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்…

First Published Dec 12, 2016, 12:56 PM IST
Highlights


வங்கிகளுக்கு வழங்கப்படும் பண விவரத்தை தினமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, அனைத்து ஏடிஎம்களும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாட்டை தொடங்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம், “கருப்புப் பணத்தை ஒழிப்பது என்ற போர்வையில் ரூ. 500, ரூ. 1000 பணத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால், சாதாரண மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அனைத்துத் துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கருப்புப் பணம் பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதுவரை ரூ. 14 இலட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ. 3 இலட்சம் கோடி மட்டுமே புதிய பணம் வழங்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வாரத்துக்கு ஒருவர் ரூ. 24,000 பணம் எடுக்கலாம் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், அது மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுக்காததால், மக்களுக்கு பணம் வழங்க இயலவில்லை. இதனால் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே தகராறு, பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதைத் தீர்க்க வலியுறுத்தி, வரும் 14 ஆம் தேதி மாநில தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தேவையான பணத்தை வழங்க வேண்டும். பணம் வழங்கமுடியவில்லை எனில், நிலைமை சீரடையும் வரை வங்கிகளை தாற்காலிகமாக மூடிவைக்க வேண்டும்.

வங்கிகளுக்கு வழங்கப்படும் பண விவரத்தை தினமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அனைத்து ஏடிஎம்களும் உடனடியாக செயல்பட வேண்டும். இல்லையெனில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

இந்த மாநாட்டிற்கு சங்கத் தலைவர் பி. விஸ்வநாதன் தலைமை வகித்தார். ராமராஜ் வரவேற்றார். இதில் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் கே. வெங்கட்ராமன், மாநிலங்களவை உறுப்பினர்கள் டி. ராஜா, டி.கே. ரங்கராஜன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

மாநாட்டில், விலைவாசி உயர்வைக் கண்டிப்பது, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, வங்கித் துறையில் தேவையற்ற சீர்திருத்தங்களை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கப் பொதுச் செயலர் என்.எஸ். ஸ்ரீதர் நன்றி கூறினார்.

tags
click me!