
திருப்பூர்
திருப்பூரில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவன் மீது சரக்கு வேன் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
திருப்பூர் - அவினாசி சாலை அம்மாபாளையத்தை அடுத்த ராக்கியாபாளையம் நெசவாளர் குமரன் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய இளைய மகன் முரளிகிருஷ்ணன் (13). இவர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முரளிகிருஷ்ணன் 8-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு போகாமல் விடுமுறை எடுத்துள்ளான். இதனால் அவனும் அவனுடைய அண்ணனும் மோட்டார்சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அம்மாபாளையம் ராக்கியாபாளையம் சாலையில் உள்ள ரேசன் கடை அருகே சென்றபோது திடீரென ஒரு மொபட் குறுக்கே வந்தது. இதனால் மொபட்டும், மோட்டார் சைக்கிளும் பலமாக மோதிக் கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முரளிகிருஷ்ணன் நிலை தடுமாறி சாலையில் விழுந்தான். அப்போது பின்னால் வேகமாக வந்த சரக்கு வேனின் சக்கரத்தில் முரளிகிருஷ்ணன் சிக்கினான்.
இதில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தான். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முரளிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சரக்கு வேன் ஓட்டுநரான ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (46) என்பவரை பிடித்து காவலாளார்கள் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.