
மதுரை
பல வருடங்களாக இருந்த வாரச்சந்தைக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து கொட்டும் மழையிலும் காய்கறி வணிகர்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம், காளவாசல் பை–பாஸ் சாலையில் கடந்த பல வருடங்களாக வாரந்தோறூம் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெற்று வந்தது.
போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று சப்பைக் கட்டு கட்டி இந்தச் சந்தைக்கு மாநகராட்சி சமீபத்தில் அனுமதி மறுத்துவிட்டது. அதனால், மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று காய்கறி வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றுச் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட காய்கறிகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த காய்கறிகளை திருப்பி தர வேண்டும் என்றும், காய்கறிச் சந்தை நடத்த அனுமதிக்க வழங்க வேண்டும் என்றும் காய்கறி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் சாலை மறியல் செய்வதற்காக கோரிப்பாளையம் சென்றனர். அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது, கொட்டும் மழையிலும் தங்களது கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தில் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.