
துணை சபாநாயகரின் மகன் ஓட்டிய கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், அவருடன் பயணம் செய்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
கோவையில் இருந்து கோவை தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள், 4 மாணவிகள் ஆகியோர்ர் ஈரோடு நோக்கி நேற்று மாலை ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை கல்லூரி மாணவரும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுமான பிரவீன் (19) ஓட்டினார். காரில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மதன் என்பவரின் மகள் சுரேகா (18), அதே பகுதியை சேர்ந்த மந்த்ரா (18), திருப்பூர் செட்டிபாளையம் பெரியநாயகி (18), கோவை ரத்தினபுரி சுவேதா (18), கோவை ரேஸ்கோர்ஸ் திலக் (19) ஆகியோர் பயணம் செய்தனர்.
அவிநாசி அருகே பெருமாநல்லூர் ஆதியூர் பிரிவு புறவழிச்சாலையில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென பிரவீனின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்த சென்டர் மீடியன் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய அதே வேகத்தில் கார், சாலையின் மறுபுறம் பாய்ந்து ஈரோட்டில் இருந்து கேரளா நோக்கி வந்த இன்னொரு கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கல்லூரி மாணவி சுரேகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலமாக கிடந்த சுரேகாவை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.