
காஞ்சிபுரம்
நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமைடந்து வருவதாலும், ஆங்காங்கே மழை பெய்து வெள்ளநீர் தேங்கி வருவதாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளகாடாக தெரிகிறது.
இதில், தாம்பரம் அஞ்சுகம் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியில் இருந்த 250-க்கும் மேற்பட்டோர் பெருங்களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமிற்கு ஆட்சியர் பொன்னையா நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் பா.பொன்னையா கூறியது: “ஒரு அடிக்கு மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மேலும், பாதிப்பு ஏற்படாத வகையில், அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுபோல, குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படுவர். இதற்கான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன” என்றுத் தெரிவித்தார்.