சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய பெருந்தொழிலதிபர்… முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு !!

First Published Aug 10, 2018, 10:47 AM IST
Highlights

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் சிலை காணாமல் போன வழக்கில்  பிரபல  டிவிஎஸ் நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன்  முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தேவையில்லாமல் தனது பெயர் சேர்க்கப்பட்டுவிட்டதாக அந்த மனுவில் வேணு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன்  என்பவர் சென்னை உயர்நீதிமன்ற  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டதாகவும், சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும்,  அனைத்து சிலைகளும் கோவிலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக  ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுள்களுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்த டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், ‘ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் உட்பட பல கோயில் திருப்பணி குழுக்களில் தாம் இருந்துள்ளதாகவும்,  ஸ்ரீரங்கம் கோயில் சிலை விவகாரத்தில் தனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வேணு சீனிவாசன்  குறிப்பிட்டுள்ளார். 

click me!