
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இரண்டு இடங்களில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய ஐவரை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு அரசு பேருந்து ஒன்று நாசரேத் நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தை தூத்துக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மணி 52) ஓட்டிச் சென்றார்.
தூத்துக்குடி, கோமதிபாய் காலனியை சேர்ந்த முத்து என்பவர் நடத்துநராக இருந்தார். பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டை கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் மூன்று மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தில் பேருந்து நடத்துநர் முத்துவுக்கு கழுத்தில் காயமும், ஓட்டுநர் மணிக்கு கை, காலில் லேசான காயமும் ஏற்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனையடுத்து பேருந்தை முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு திருப்பி கொண்டுவரப்பட்டது. அங்கு இருந்து மாற்று பேருந்து மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயமடைந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவலாளர்கள் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதேபோன்று, கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு நேற்று காலையில் அரசு பேருந்து புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. ஆறுமுகநேரியை அடுத்த சாகுபுரம் பேருந்து நிறுத்தத்தை கடந்து, பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் திடீரென்று பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசி தாக்கினர்.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. பின்னர் மர்மநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
பேருந்தின் கண்ணாடி சிதறல்கள் தெறிந்து விழுந்ததில் ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துநர் பிச்சைமணி ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனே அவர்கள் இருவரும் ஆறுமுகநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.