போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரின் உதவியோடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
பேருந்து தொழிலாளர்கள்- வேலை நிறுத்தம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இதனையடுத்து இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தொழிலாளர் சங்கத்தோடு நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து இரவு 12 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
வழக்கம் போல் இயங்கும் பேருந்துகள்
ஆனால் தமிழக அரசானது தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லையென அறிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகிறது. மதுரையில் பேருந்துகளை தனியார் தொழிலாளர்களை வைத்து இயக்கப்பட்டது. இதற்கு பேருந்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்போடு பேருந்து சேவையானது தொடங்கியுள்ளது. இதே போல சென்னையில் 32 பணிமனைகளில் இருந்து 3092 மாநகர பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 2749 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகள் அச்சப்பட தேவையில்லை
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 115 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே சென்னையில் பயணிகள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ள மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்