
அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் அடங்கும் அரசு பேருந்து போக்குவரத்து துறையின் ஸ்டிரைக்கால் தமிழ்நாடு தாங்க முடியாத சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடியான கால கட்டத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தாங்க இயலாத அளவுக்கு கட்டண கொள்ளையில் இறங்கி சாகடிக்கின்றனர் மக்களை.எங்கும் நகரமுடியாமல் அவதிப்படும் மக்கள் நிம்மதியிழப்பு, பொருளிழப்பு என்று எல்லா வகையிலும் துயரத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில் எனும் வழக்கறிஞர் தொடுத்த பொது நல வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவுக்கு கீழ் படிந்து போக்குவரத்து துறை ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்களா அல்லது உச்சநீதிமன்றத்திடம் முறையிடுவார்களா என்பது விரைவில் புரியும்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு நிலைமை சீரானால் நீதித்துறையின் மாண்பு பாதுகாக்கப்படுவதோடு மக்களின் துயரும் தீர்க்கப்படும்.
ஏற்கனவே பழைய ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நெடு நாள் நீண்டபோது இந்த எஸ்மா சட்டம் பயன்படுத்தப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது இந்த எஸ்மா சட்டம் பாய்ச்சப்பட்டு கைது நடவடிக்கைகள் வெடித்தது நினைவிருக்கலாம்.