
60 வது முடிந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், வங்கி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
41 நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தை மத்திய அரசு பெரிதாக கண்டு கொள்ள வில்லை.
இதனிடையே டெல்லி வந்த தமிழக முதலமைச்சர் மத்திய அரசு இந்த பிரச்சனையில் உதவாவிட்டாலும் தமிழக அரசு உதவும் என வாக்குறுதி கொடுத்தார்.
இதனால் அந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் எனவும் அய்யாக்கண்ணு தெரிவித்திருதார்.
இந்நிலையில், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 21 ஆம் தேதி விவசாயிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நாளை மறுநாள் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.