
2 ஆவது மாடியிலிருந்து குதித்தார் அரசுப் பேருந்து டிரைவர்… கட்டாயப்படுத்தி பஸ்ஸை எடுக்கச் சொன்னதால் விபரீதம்..
விழுப்புரத்தில் பேருந்தை ஓட்ட கட்டாயப்படுத்தியதால் அரசு பஸ் டிரைவர் ஹென்றி, மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று ஓட்டுநர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது.
அப்படி அதிகாரிகள் ஓட்டுநர் ஒருவரை கட்டாயப் படுத்தியதால் விபரீத விளைவு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மூன்றாவது பணிமனையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஹென்றி பால்ராஜ், நேற்று இரவு ஓய்வெடுத்துள்ளார் . அவரை இன்று காலை பேருந்தை இயக்கச்சொல்லி ,கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார். தொடர்ந்து 2 நாட்களாக அவர் பேருந்தை ஓட்டியதால் பணிக்கு செல்ல ஹென்றி பால்ராஜ் மறுத்துள்ளார்.
தொடர்ந்து கட்டாயப்படுத்தியதையடுத்து அவர் திடீரென 2வது மாடியிலிருந்து குதித்து, அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தலையில் பலத்த காயம் மற்றும் கையில் எலும்பு முறிவடைந்த நிலையில் அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.