மாடுபிடி வீரர்களை தூக்கி வீசிய சல்லிக்கட்டு காளைகள்; 45 பேருக்கு காயம்…

First Published Jul 17, 2017, 8:51 AM IST
Highlights
Bulls thrown the soldiers 45 people injured


அரியலூர்

க.பரதூரில் நடைப்பெற்ற சல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டி தூக்கி வீசியதில் மாடுபிடி வீரர்கள் 45 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள க.பரதூரில் நேற்று சல்லிக்கட்டுப் போட்டி நடைப்பெற்றது.

இதனையொட்டி நடுத்தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 200–க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 450–க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். சில காளைகள் வீரர்களின் கைக்கு பிடிபடாமல் தூக்கி வீசி பந்தாடியது.

காளைகள் முட்டித் தூக்கியதில் மேலப்பழுவூரை சேர்ந்த சேகர் (42), சாத்தமங்கலத்தைச் சேர்ந்த விக்கி (18), கலியன் (48), மால்வாய் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாபு (40), குமுழுரைச் சேர்ந்த பரமசிவம் (40), திருமானூரைச் சேர்ந்த இளையராஜா (27), பழனிசாமி (40), விக்னேஷ் (30) உள்பட 45 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் படுகாயமடைந்த சேகர், விக்கி, கலியன், ஜெயபாபு ஆகிய நால்வரையும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். லேசான காயமடைந்தவர்கள் திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

சல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

சல்லிக்கட்டு போட்டியை பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றுப் போட்டியை கண்டுக் களித்தனர்.

click me!