
தேனி
தேனியில் சொத்துப் பிரச்சனையில் தம்பி, தலையில் செங்கல்லைப் போட்ட அண்ணனை காவலாளர்கள் கைது செய்தனர்.
தேனி மாவட்டம். கம்பம் உலகத் தேவர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் செல்வேந்திரன் (40). இவரது தம்பி தெய்வேந்திரன் (38). இவர் கே.கே.பட்டி கிருஷ்ணன் வாத்தியார் தெருவில் குடியிருந்து வருகிறார்.
தெய்வேந்திரன் கம்பம் உலகத்தேவர் தெருவில் உள்ள அண்ணன் செல்வேந்திரன் வீட்டின் முன்பு பூர்வீகச் சொத்தை பிரிப்பது குறித்து நேற்று காலை பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, சொத்தை பிரிப்பதற்கு மறுத்த செல்வேந்திரன், தம்பியை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதில், அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து செல்வேந்திரன் தம்பி தலையில் போட்டுள்ளார். இதனால், தெய்வேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அருகிலிருந்த உறவினர்கள் தெய்வேந்திரனை உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், இதுகுறித்து தெய்வேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கம்பம் வடக்கு காவலாளர்கள், செல்வேந்திரனை கைது செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.