
பெரம்பூரில் தனியார் பள்ளிக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை 700க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
நேற்று மதியம் பள்ளியின் முதல்வர் அலுவலக தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசிய மர்மநபர், ‘உங்கள் பள்ளியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்துள்ளேன். சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறும்,’ என கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக கொடுங்கையூர் போலீசாருக்கு, தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மேப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு சென்று, பள்ளி முழுவதும் ஒரு இடம் விடாமல் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேரம் தேடியும் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இதனால், அந்த தொலைபேசி மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது.
இதனிடையே பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, வகுப்பில் இருந்து மாணவ, மாணவிகளை அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பினர். இதுபற்றி அறிந்ததும், மாணவர்களின் பெற்றோர் சிலர், பள்ளி முன்பு திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை, வலைவீசி தேடி வருகின்றனர்.