
தேனி
போடி – மதுரை இடையே அகல இரயில்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேனியில் அகல இரயில் பாதை திட்ட அமலாக்கக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தேனி மாவட்டம், போடியில் இருந்து மதுரைக்கு மீட்டர் கேஜ் இரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010–ஆம் ஆண்டின் இறுதியில் இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இரயில் பாதை அமைக்கும் பணிகள் முடங்கியன. பின்னர், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகளில் மெத்தனப்போக்கே நிலவியது.
இந்த இரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போடி – மதுரை, திண்டுக்கல் – லோயர்கேம்ப் அகல இரயில் பாதை திட்ட அமலாக்கக்குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தேனியில் நேற்று நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமலாக்கக் குழுத் தலைவரும், பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாசர் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நடேசன், அல்லிநகரம் கிராம குழுத் தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அமலாக்கக்குழு தலைவர் லாசர் செய்தியாளர்களிடம் கூறியது: "2015–ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்ற வாக்குறுதியுடன்தான் போடி – மதுரை இரயில் 2010–ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால், 2014–ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்திற்காக ரூ.30 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது.
பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018–ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை பணிகள் முடிவுற்று இரயில் இயக்கப்படும் என்று இரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டும் பணிகள் தொடங்காமல் இருந்தது. தற்போது தான் பணிகள் தொடங்கி உள்ளன. எனவே, திட்டப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை ஒரே தவணையாக ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அதேபோல், திண்டுக்கல் – லோயர்கேம்ப் இடையே அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்’ என்றுத் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள், ஓய்வூதியர் சங்கத்தினர் மற்றும் மக்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.