தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு; காவி மயத்தை எதிர்த்து வலுக்கும் கருப்பு மயம்...

First Published Apr 13, 2018, 10:07 AM IST
Highlights
black flag protest against Modi Tamil Nadu visit


திருப்பூர்
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கருப்பு கொடி, கருப்பு சட்டைகள், கருப்பு பலூன்களை என கருப்பு மையமாக காட்சியளித்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவைகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட கோரியும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கருப்பு உடை அணிந்தும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்படி, திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட தென்னம்பாளையம் கிழக்கு கணேஷ் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் தி.மு.க.வினர் மற்றும் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டினார்கள். 

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திருப்பூர் கிளை மற்றும் தி.மு.க.வின் 50-வது வட்டகிளை சார்பில் வெள்ளியங்காடு பகுதியில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை தாங்கினார். தி.மு.க. 50-வது வார்டு செயலாளர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி, மாநகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, பெரியார் மாணவர் கழகத்தின் அமைப்பாளர்கள் அறிவரசன், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர். இதில் ஏராளமானோர் கருப்பு சட்டையுடன் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

click me!