
தூத்துக்குடி
குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதால் திருவைகுண்டம் தடுப்பணையில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.
திருவைகுண்டம் தடுப்பணையில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தடுப்பணையை பார்வையிட்டார்.
அப்போது, தடுப்பணையின் மதகுகள் அருகில் சேதம் அடைந்த பகுதிகளில் பொதுப்பணித் துறையினர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம், பெரிய வெள்ளத்தையும் தாங்கும் வகையில் தடுப்பணையை உறுதியாக அமைக்குமாறு நல்லகண்ணு அறிவுறுத்தினார்.
பின்னர் அவர், திருவைகுண்டம் தடுப்பணையில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும், கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். அப்போது அங்கு இரண்டு மின் மோட்டார்கள் இயங்கி கொண்டிருந்தன.
பின்னர் நல்லகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர், "திருவைகுண்டம் தடுப்பணையை பராமரித்து, மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்து இருந்தோம்.
திருவைகுண்டம் தடுப்பணையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரியபோது, பொக்லைன் எந்திரம் மோதியதில் தடுப்பணை சேதம் அடைந்தது. அதனை தற்போது சீரமைத்து வருகின்றனர். பெரிய மழை வெள்ளம் வந்தாலும், அதனை தாங்கும் வகையில், தடுப்பணையை உறுதியாக அமைக்க வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், திருவைகுண்டம் தடுப்பணையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் மூன்று மின் மோட்டார்கள் உள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னரும், தற்போது திருவைகுண்டம் தடுப்பணையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தினமும் இரண்டு மின் மோட்டார்களில் தண்ணீர் உறிஞ்சி அனுப்பப்படுகிறது. இந்த தண்ணீரை பிற தொழிற்சாலைகளுக்கு மறுவிற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இதனால் திருவைகுண்டம் தடுப்பணையில் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது. பல இடங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கப்பெறாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, திருவைகுண்டம் தடுப்பணையில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் வழங்க கூடாது. இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று அவர் தெரிவித்தார்.