துபாயில் இருந்து ஒட்டகம் வேண்டுமானால் வரும் ஒரு ரூபாய் கூட வராது என அந்நிய முதலீடுகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
முதல்வராக பொறுப்பேற்றது முதலே தமிழகத்தில் அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக பல்வேறு நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று அந்நிய முதலீடுகளை ஈர்த்து திரும்பினார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றார். அப்போது, சுமார் ரூ.6000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் ரூ.1000 கோடியும், லுலு குழுமத்துடன் ரூ.3500 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
துபாயில் இருந்து தமிழகத்திற்கு ஒட்டகம் வரலாம்.. ஆனால், இன்னும் 50 வருடங்களானாலும் துபாயில் இருந்து திமுக கூறிய முதலீடு ஒரு ரூபாய் கூட வராது..
- மாநில தலைவர் திரு. pic.twitter.com/iTxdnXbOZy
இந்த நிலையில், துபாயில் இருந்து ஒட்டகம் வேண்டுமானால் வரும் ஒரு ரூபாய் கூட வராது என அந்நிய முதலீடுகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, “மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறுகிறார்கள். நீங்கள் தவறு செய்வதால் உங்கள் மீது மத்திய அரசு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கிறது. இதனை இல்லை என்று முதல்வர் மறுக்கட்டும். தனது மகன் உதயநிதி ஸ்டாலின் 2009 இல் நோபல் குழுமத்தில் இயக்குனராக இல்லை, 2016இல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோபல் குழுமத்தில் இயக்குனராக இல்லை என முதல்வர் ஸ்டாலின் சொல்லட்டும். அதற்கான ஆதாரங்களை நாங்கள் கொடுக்கிறோம்.” என்றார்.
அதே நோபல் நிறுவனத்தோடு ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டால் எப்படி பணம் வரும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, “அந்த பணம் இங்கிருந்து போனால்தானே வரும். அதனை நாங்கள் தடுத்து வைத்திருக்கிறோம். இங்கிருந்து ஆயிரம் கோடி ரூபாய் செல்ல வேண்டும் அது வெள்ளை பணமாக இங்கு வர வேண்டும். ஆனால், நீங்கள் துபாய் சென்று வந்த பிறகு பாஜக தலைவர்களை பற்றி பேசிய பிறகு, இங்கிருந்து துபாய்க்கு ஒரு ரூபாய் கூட போகவில்லை. அமலாக்கத்துறை அதனை நிறுத்தி வைத்துள்ளது. அப்புறம் எப்படி அங்கிருந்து வரும். எனவே, இன்னும் 50 ஆண்டுகள் ஆனால் கூட துபாயில் இருந்து ஒட்டகம் வரலாம் ஆனால், திமுக கூறிய முதலீடுகளில் ஒரு ரூபாய் கூட வராது. அதற்கான சாத்தியம் இல்லை. அதேபோல்தான் ஜப்பான், சிங்கப்பூர் முதலீடுகளும்.” என்று விமர்சித்துள்ளார்.