அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாட்டை முன்னிட்டு, செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவு விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அழைப்புக் கடிதத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் என்று போடுவதற்குப் பதிலாக, "பாரத குடியரசுத் தலைவர்" எனக் குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, இதுபோன்ற அழைப்பிதழ்களின் தலைப்பாக ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது இந்தியா என்பதற்குப் பதில் பாரதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு 'இந்தியா' (INDIA) என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது" என்று சாடியுள்ளார்.
மேலும், "இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.
"அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்" எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றம் செய்யும் சட்ட மசோதா வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கும் 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.