
நீட் தேர்வால் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகன் ஜெகதீஸ்வரன் உயிரிழந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை செல்வசேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். “நீட் தேர்வு எனும் பலிபீடம் மேலும் ஒரு மாணவனின் உயிரை பறித்துள்ளது. அரசியல் மாற்றம் நடக்கும்போது நீட் தடுப்பு சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்.” எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குடி எனும் பலிபீடத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், டாஸ்மாக் எனும் தடுப்புச் சுவர் எப்போது பொலபொலவென உதிர்ந்து விழும் என முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், “"நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்து விட்டது மிக கொடூரமான நிகழ்வாகும். அரசியல் மாற்றம் நடக்கு போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்" என்று கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். அதாவது தற்கொலைகளின் காரணமாக நீட் தேர்வு தடை செய்யப்பட வேண்டும் என்கிறார்.
குடும்பத்தையே காவு வாங்கிய நீட்..! இனி ஓர் உயிரைக் கூட நாம் இழக்கக்கூடாது-! ராமதாஸ் ஆவேசம்
தமிழகத்தில் கடந்த காலங்களில் 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியுற்றதையடுத்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், இன்று வரை 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து விட்டோமா? அல்லது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளே இனி இல்லை என்று சொல்லி விட்டோமா? தோல்வியுறும் மற்றும் அச்சப்படும் மாணவர்களுக்கு தைரியம் அளிக்காத சமுதாய கட்டமைப்பு மற்றும் பள்ளிகளின் கல்வி அமைப்பே இந்த தற்கொலைகளுக்கு காரணம் என்பதை மறுக்க முடியுமா?
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னரே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இரட்டை இலக்கத்தில் மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் பயில தேர்வு பெறுகின்றனர். அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவ கல்வி பயில்கின்றனர். இது வரை இல்லாத அளவில், தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் அதிக அளவில் இடம் பெறுகின்றனர். அதனால் ஒவ்வொரு வருடமும் மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது. கடந்த 50 வருடங்களில், கடந்த சில ஆண்டுகளாக தான் ஏழை எளிய மாணவர்கள் பலர் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
'நீட்' தேர்வு தமிழகத்தில் சமநீதியை, சமூக நீதியை, சமத்துவத்தை நிலை நாட்டி வருகிறது என்பதே உண்மை. தி மு க உள்ளிட்ட நீட் எதிர்ப்பாளர்களின் அனைத்து வாதங்களையும் கேட்டறிந்து அவை தவறு என்று உணர்ந்தே உச்சநீதி மன்றம் நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.” என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் உட்பட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் காவல்துறையையே கலைத்து விட வேண்டும் என்றால் அது முறையானதாக இருக்குமா? எனவும் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “எந்த வயதிலும், தற்கொலை எண்ணம் என்பது துரதிர்ஷ்டவசமானது. மன அழுத்தத்தின் உச்சக்கட்டம் அது. ஒரு சிலரை மட்டுமே அது தொற்றிக்கொள்ளும். ஆனால், மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்வதை விட மற்றவர்களின் துன்ப செயலால், வெறுப்பால் தற்கொலை செய்து கொள்வதுதான் உண்மையிலேயே கொடூரமானது. கடந்த சில ஆண்டுகளில் குடியின் கொடுமையால் நடைபெற்ற, பின் வரும் துன்ப செயல்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறதே தமிழக அரசு, ஏன்?” எனவும் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குற்றச் சம்பவங்களையும், தற்கொலைகளையும் பட்டியலிட்டுள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “குடியால் நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் தற்கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? 'மது' எனும், 'குடி' எனும் பலிபீடத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டே இருக்கின்றனவே; 'டாஸ்மாக்' எனும் தடுப்புச் சுவர் எப்போது பொலபொலவென உதிர்ந்து விழும்? டாஸ்மாக் மற்றும் மதுவுக்கு தமிழகத்தில் தடை என முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது கூறுவார்?” எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.