
கடலூர்
பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற அதிமுகவை எப்படி பகடை காயாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை என்று கடலூரில் முத்தரசன் பேட்டியளித்தார்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்காவிட்டால் போராட்டத்தை தீவிரமாக்குவோம் என்று கடலூரில் முத்தரசன் கூறினார்.
கடலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மே தின பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடலூர் வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “140 ஆண்டுகள் இல்லாத வறட்சி தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது என அரசே ஒப்புக் கொண்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அறிவிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு தமிழகத்தை இதுவரை வறட்சிப் பாதித்த மாநிலமாக ஏற்கவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை.
அதேபோல மாநில அரசு, மத்திய அரசிடம் வறட்சி நிவாரணத்திற்கும், வார்தா புயல் பாதிப்புக்கும் ரூ.62 ஆயிரம் கோடி நிதி கேட்கிறது. ஆனால், மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி அனுமதித்து உள்ளது. எஞ்சியுள்ள நிதியை மாநில அரசு, மத்திய அரசிடம் கேட்க தயாராக இல்லை. இதுவரை வற்புறுத்தவில்லை.
மீனவர்களுக்கு வேலையில்லாத காலத்தில் நிவாரண தொகை வழங்குவது போல விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராடி வருகிறோம்.
இத்தகையச் சூழ்நிலையில் மாநில அரசு உச்ச நீதிமன்றம், வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது.
அதேநேரத்தில் நோய்வாய்பட்டு, உடல் நிலை பாதித்து இறந்த 82 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி இருக்கிறோம் என்று அதே உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இது முரண்பாடாக இருக்கிறது.
தமிழக அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு நிவாரணம் வழங்குவது மட்டுமல்ல, வறட்சியில் இருந்து முற்றிலுமாக தமிழகத்தை மீட்பதற்கு, மத்திய அரசிடம் உரிய நிதியைக் கோரி, விவசாயிகளை காப்பற்றுவதற்கும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இந்த பிரச்சனைகளை முன்வைத்து தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், இரண்டு பெரிய வணிகர் சங்கங்கள் ஒன்றிணைந்து முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தினோம். அதுவும் வெற்றிகரமாக முடிந்தது.
ஆனால், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த போராட்டம் நடந்ததாக கூறுகிறார்கள்.
விவசாயிகளின் பிரச்சனைக்காக போராடிய கட்சிகள் மீது பழி சுமத்துவது ஏற்புடையதல்ல. விவசாயிகளின் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் தீர்க்காவிட்டால் மீண்டும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்.
இந்தி திணிப்பு நடவடிக்கையை பாரதீய ஜனதா செய்து வருகிறது. இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அம்மா ஆட்சி நடந்து வருகிறது. தற்போது அந்த கட்சியில் உள்கட்சி பிரச்சனை இருக்கிறது. அந்த உள்கட்சிப் பிரச்சனை உருவாகுவதற்கோ, உருவாக்கி செயல்படுத்துவதிலோ பாரதீய ஜனதாவின் பங்கு இருக்கிறது. அதிமுக கட்சி இரண்டாக பிரிவது, மீண்டும் இணைவது அனைத்திலும் பாரதீய ஜனதா தலையீடு உள்ளது.
பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற அ.தி.மு.க.வை எப்படி பகடை காயாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை.
காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காத சூழ்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பண்ணார் என்ற இடத்தில் ஆறு இடங்களில் ஆற்றில் ராட்சத கிணறுகளை வெட்டி தண்ணீர் எடுத்து வருகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கோடநாடு பங்காளவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமை ஆக்க வேண்டும் அல்லது அவரது சொத்துகளுக்கு யாராவது உரிமை கொண்டாடினால், அதுபற்றி உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
விவசாயிகளின் பிரச்சனைத் தொடர்பாக அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். கூட்டணிக்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை” என்று முத்தரசன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கடலூர் பெரியார் சிலையில் இருந்து மே தின பேரணி புறப்பட்டது. பேரணியை முத்தரசன் தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் குளோப், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் அரிகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றுப் பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.