பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை குழு: ஹெச்.ராஜா இன்; அண்ணாமலை அவுட்!

By Manikanda PrabuFirst Published Feb 29, 2024, 3:44 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக குழு அமைத்துள்ளது

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, அறிக்கை தயாரிப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் அவர்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக குழு அமைத்துள்ளது. அக்குழுவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Latest Videos

மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்குவதே எங்கள் நோக்கம்: ஓ.பி.ரவீந்திரநாத் சூளுரை!

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக அமைத்துள்ள குழுவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாததும், ஹெச்.ராஜா இடம்பெற்றுள்ளதும் கவனம் ஈர்த்துள்ளது. பாஜக மூத்த நிர்வாகியான ஹெச்.ராஜா அண்மைக்காலமாகவே அரசியல் நிகழ்வுகளில் பெரிதாக கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்.

அவருக்கு ஆளுநர் பொறுப்பை பாஜக மேலிடம் வழங்கும் என எதிர்பார்ப்பு இதுவரை  ஏமாற்றமாகவே உள்ளது. இதனால்தான் அவர் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக அமைத்துள்ள குழுவில் ஹெச்.ராஜா இடம்பெற்றுள்ளார். 

அதேபோல், பாஜக அமைத்துள்ள குழுவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் பாஜக மேலிடம் ஈடுபட்டுள்ளது. ஆனால், அண்ணாமலையாலேயே பாஜகவுடனான கூட்டணியை முறித்ததாக தெரிவித்துள்ள அதிமுக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் அண்ணாமலை இடம்பெறாதது கவனம் ஈர்த்துள்ளது.

click me!