மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்குவதே எங்கள் நோக்கம் என ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சூளுரைத்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அப்படியே உள்ளது. தொகுதிப் பங்கீட்டை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்யவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. எனவே, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை பொறுத்தவரை ஓபிஎஸ் அணியினர், டிடிவி தினகரனின் அமமுக, சசிகலா, உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் வேறு சில கட்சிகளையும் கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்கும் என கூறப்படுகிறது.
undefined
அதேசமயம், அதிமுகவை மீண்டும் கூட்டணியில் கொண்டு வரும் முயற்சிகளிலும் பாஜக மேலிடம் ஈடுபட்டுள்ளது. அதிமுகவுக்கான கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித் ஷா வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஒருவேளை தமிழக வாக்களர்களின் மனநிலை அறிந்து பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளதாகவும், தேர்தலுக்கு பின்னர் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிகக் கூடும் எனவும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனிடையே, தமிழகம் வந்த பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களில் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரையும் பிரதமர் மோடி புகழந்து பேசியுள்ளார். இந்த விஷயங்கள், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இல்லையோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், தாமரை சின்னத்தில் ஓபிஎஸ் அணியினர் போட்டியிட பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும், ஆனால், இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு பெற்றுத்தந்து தேர்தலை சந்திக்க ஓபிஎஸ் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்குவதே எங்கள் நோக்கம் என ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சூளுரைத்துள்ளார். ரயில்வே சம்பந்தமான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தாமரை சின்னத்தில் ஓபிஎஸ் அணியினர் போட்டியிட பாஜக நெருக்கடி கொடுப்பதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.
நாளிதழ் விளம்பரத்தில் சீனக் கொடி சர்ச்சை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!
தனித்து போட்டியிடும் எண்ணம் இல்லை என்ற அவர், “இன்னும் இரண்டு நாளில் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும். மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்குவதே எங்கள் நோக்கம்.” என சூளுரைத்தார்.
தேனி அல்லது தென்மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிட நான் தயார் எனவும், பாஜக கூட்டணியில் எத்தனை சீட் என்பதை தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் எனவும் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “தேசிய ஜனநாயக கூட்டணியில் பன்னீர்செல்வம் இல்லை என இதுவரை பாஜக அறிவிக்கவில்லை. பாஜக மாநிலத் தலைவர் மற்றும் மேலிட தலை வர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். இன்றைக்கும் பேசியிருக்கிறோம். தமிழகம் வந்த மோடி, எங்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரே குடும்பத்துக்குள் இருக்கிறோம்.” என ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது அணியினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.