பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!

Published : Dec 23, 2025, 07:53 PM IST
Nainar Nagendran and EPS

சுருக்கம்

ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவகாரம் குறித்து ஏதும் பேசவில்லை. ஆனால் அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவர்களும் இல்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பாஜகவில் பியூஸ் கோயல், நயினார் நாகேந்திரன், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, கே.பி,முனுசாமி ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பாஜகவுக்கு 23 தொகுதிகள்; இபிஎஸ் கறார்

இந்த பேச்சுவார்த்தையின்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க இபிஎஸ் சம்மதித்து விட்டதாகவும், அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட்டு பாஜகவுக்கு 23 தொகுதிகளை மட்டுமே ஒதுக்குவோம் என இபிஎஸ் கறார் காட்டியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் பாமக, தேமுதிகவும் என்.டி.ஏ கூட்டணியில் வர உள்ளதாகவும் தகவல்கள் கூறின.

நயினார் நாகேந்திரன் விளக்கம்

இந்த நிலையில், அதிமுக, பாஜக பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழக அரசியலின் கள நிலவரம் தான் பேசப்பட்டது. தொகுதி பங்கீடு குறித்து இன்று எதுவும் பேசப்படவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவு ஓட்டு வாங்கினோம்? என்பது குறித்து பேசினோம்.

நிரந்தர நண்பர்களும் இல்லை;பகைவர்களும் இல்லை

ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவகாரம் குறித்து ஏதும் பேசவில்லை. ஆனால் அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவர்களும் இல்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஆகவே ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். விஜய் யார் ஓட்டுகளை பிரிப்பார்? என்பதை இப்போதே சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன.

தேமுதிக, பாமக கூட்டணிக்கு வருமா?

இன்னும் நாட்கள் இருப்பதால் யார் பக்கம் யார் இருக்கிறார்கள்? யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு