
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணைப் பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் இன்று சென்னை வந்தனர். அவர்கள் முதலில் தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான 'கமலாயத்தில்' கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்த முக்கியச் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், "பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும்," என அதிரடியாக அறிவித்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ் அணிக்கு 3 தொகுதிகளும், டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்க முதற்கட்டமாக இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை (ராமதாஸ் மற்றும் அன்புமணி அணிகள்) ஒன்றிணைக்கும் பொறுப்பை அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மெகா கூட்டணியில் அதிமுக சுமார் 170 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.