அத்துமீறி துப்பாக்கியுடன் வனத்தில் நுழைந்து பறவைகள் வேட்டை…

First Published Dec 29, 2016, 10:59 AM IST
Highlights


பென்னாகரம்,

பென்னாகரம் அருகே, அத்துமீறி துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் நுழைந்து பறவைகளை வேட்டையாடிய மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பென்னாகரம் பகுதியில் உள்ளது தேவனூர் காப்புக்காடு. இந்தப் பகுதியில் மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின்படி வனவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை சுற்றுப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அக்காலத்தான்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பேரை வனத் துறையினர் சந்தேகப்பட்டு, தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (28) பிரகாஷ் (24) நெருப்பூரை சேர்ந்த மூர்த்தி (22) என தெரிய வந்தது. இந்த மூன்று பேரும் கொண்டு வந்த பையில், ஒரு குயில், இரண்டு பச்சைக்கிளிகள் மற்றும் இரண்டு கொண்டலாங்குருவிகள் இருந்தன. அவையனைத்தும் இறந்து கிடந்தன.

இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரித்தபோது இந்த மூவரும், வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து உரிமம் இல்லாத துப்பாக்கியைப் பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடி உள்ளனர் என்பது தெரிந்தது.

இதனையடுத்து மூன்று பேரும் வந்த மோட்டார் சைக்கிள், உரிமம் பெறாத துப்பாக்கி, மற்றும் வேட்டையாடப்பட்ட பறவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ், பிரகாஷ், மூர்த்தி ஆகிய மூவரையும் வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். பின்னர், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

click me!