நீர் மேலாண்மை தெரியாமல் அண்டை மாநிலங்களுடன் சண்டைபோடுகிறது தமிழக அரசு – அன்புமணி

First Published Dec 29, 2016, 10:49 AM IST
Highlights


தமிழக அரசிற்கு நீர் மேலாண்மை தெரியவில்லை. ஆனால், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டை போடுகிறது என்று பாமக இளைஞரணித் தலைவரும் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

தருமபுரி அருகே கடத்தூரில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை அன்புமணி இராமதாஸ் நேற்றுத் தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“தருமபுரி மாவட்டத்தில் 610 ஏரிகள் உள்ளன. இவற்றில் மூன்று நகராட்சிக் கட்டுப்பாட்டிலும், 11 பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டிலும், 512 ஊராட்சிகளின் கட்டுப்பாட்டிலும், 84 பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.

ஆனால், தற்போதுள்ள ஆட்சியாளர்கள் எதுவும் செய்வதில்லை. கடந்த மாதம் பென்னாகரம் பகுதி ஏரிகளைத் தூர்வார முயன்றபோது அனுமதி மறுத்துவிட்டார்கள். இனி அனுமதி அளிக்காவிட்டாலும், மாவட்டம் முழுவதும் ஏரிகளைச் சீரமைக்கும் பணியை மேற்கொள்வோம்.

மாநிலத்தில் 42,000 ஏரிகள் இருந்தன. தற்போது 37,500 ஏரிகளாகக் குறைந்துள்ளன. மீதமுள்ள 4,500 ஏரிகளைக் காணவில்லை. இதைச் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. விவசாயிகளின் தற்கொலைக்கு இவையும் ஒரு காரணம்.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வெறும் ரூ.40 ஆயிரம் கோடி போதுமானது. ஒரே ஆண்டில் முழுத் தொகை ஒதுக்க வேண்டியதும் இல்லை. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கினால் போதும். தமிழகம் செழிப்பாக மாறும்.

மாநில அரசுக்கு நீர் மேலாண்மை தெரியவில்லை. ஆனால், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நீர்நிலைகள் பாதுகாப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

ஏரிக்குள் நடைபெற்ற பூசைக்குப் பிறகு, பொக்லைன் இயந்திரத்தில் ஏறி அமர்ந்து சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை அன்புமணி தொடக்கி வைத்தார்.

இப்பணியில் ஐந்து பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அரசுத் துறை அலுவலர்கள் யாரும் வரவில்லை.

இந்நிகழ்ச்சியில் பாமக துணைப் பொதுச் செயலர் சாந்தமூர்த்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் செயலர் வேலுசாமி, கடத்தூர் வணிகர் சங்க நிர்வாகிகள் கண்ணப்பன், முத்துசாமி, குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

click me!