
திருப்பூர்
திருப்பூரில், மாநகராட்சி இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்திய புதிய வாகனத்தை திருடிவிட்டு அதே எண் பலகை கொண்ட வேறௌ பழைய இருசக்கசர வாகனத்தை நிறுத்தி நூதன முறையில் திருட்டு நடைப்பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே முத்துப்புதூர் அரசுப் பள்ளியை ஒட்டி மாநகராட்சி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் ஒன்று உள்ளது.
இங்கு, கடந்த 5-ஆம் தேதி நல்லூர் அருகே எம்.ஆர்.ஜி. நகரைச் சேர்ந்த செந்தில் (26) என்பவர், தனது புதிய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பொள்ளாச்சியில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார்.
பின்னர், திருப்பூருக்கு நேற்று வந்த அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, அவரது புதிய வாகனத்தைக் காணவில்லை.
மாறாக, தனது வாகனத்தின் பதிவு எண் பலகையுடன் பழைய இருசக்கர வாகனம் ஒன்று அங்கிருந்தது. அதனைப் பார்த்து செந்தில் அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக வாகன நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூலிக்கும் பணியாளர் பிரகாஷிடம் கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளார். இதனால், செந்தில் - பிரகாஷ் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் செந்தில், இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்திய புதிய வாகனத்திற்கு பதிலாக பழைய வாகனத்தை அதே எண் பலகையுடன் அந்த இடத்தில் இருந்தத சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.