
திருப்பூர்
இலவச மின்சார இணைப்புக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் மக்கள், மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மின்கம்பங்களிலிருந்து மின்சாரம் எடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி செய்தியாளர்களிடம் நேற்று திருப்பூரில் கூறியது:
"ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். சுமார் 7.5 டி.எம்.சி. தண்ணீர் வரை இத்திட்டத்தால் கிடைக்கும். இத்திட்டத்துக்கு கேரள அரசு ஒப்புதல் தெரிவித்தும்கூட, தமிழக அரசு இதை நிறைவேற்றாமல் உள்ளது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆனைமலையாறு - நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தை விரைவில் தொடங்க உள்ளோம்.
இதில், அரசியல் சார்பற்ற இயக்கங்கள், பாசன விவசாயிகள், மக்கள், இளைஞர்களை ஒருங்கிணைக்க உள்ளோம்.
இந்தத் திட்டத்தின் தேவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஏர்முனை அமைப்பு சார்பில் குறும்படம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டப் போராட்டக் குழு கூட்டமைப்புபோல் ஆனைமலையாறு - நல்லாறு தண்ணீருக்கான இயக்கமும் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடும்.
தென்னை விவசாயிகளின் நலன் கருதி "நீரா'வுக்கான உரிமையும், "கள்' இறக்க அனுமதியும் வழங்க வேண்டும். இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
தமிழகத்தை மின்மிகை மாநிலம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்து காத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு விரைவாக வழங்க வேண்டும்.
அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் தடையை மீறி மின்கம்பங்களிலிருந்து மின்சாரம் எடுக்கும் போராட்டத்தை, இலவச மின்சாரத்திற்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் நினைவு நாளான ஜூலை 5-ஆம் தேதியிலிருந்து முன்னெடுப்போம்.
மத்திய அரசானது இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை மாநில அரசு ஏற்கக் கூடாது.
விளைநிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டால் விவசாயம் பொய்க்கும். எனவே, இந்தத் திட்டத்தை நெடுஞ்சாலைகள் வழியாக புதைவட முறையில் கொண்டு செல்ல வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.