
கே.கே.நகரில் சமீபத்தில் 22 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக சமீபத்தில் இரண்டுபேர் பிடிபட்டதை தொடர்ந்து நேற்று வாகன சோதனையில் 5 பேர் கும்பல் பிடிபட்டது. அவர்கள் ஓட்டி வந்த கார் மற்றும் 18 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை நகரில் சமீப காலமாக விலை உயர்ந்த மோட்டார் பைக்குகள் காணாமல் போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இது பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்கும் படி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டதை அடுத்து தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு வழிகாட்டுதலின் பேரில் திநகர் துணை ஆணை சரவணன் ஆலோசனை பேரில் அஷோக் நகர் உதவி கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு இதுவரை 40 மோட்டார் பைக்குகளை பிடித்துள்ளனர்.
கமிஷனர் உத்தரவின் பேரில் திநகர் பகுதியில் தான் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு குற்றச்செயல்கள் நடக்கா வண்ணம் தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஷோக் நகர் உதவி கமிஷனர் ஹரிகுமார் ஆய்வாளர்கள் தங்கராஜ் , சங்கர் அடங்கிய தனிப்படை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது.
அப்போது வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட் காரில் வந்த ஒரு கும்பலை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காரில் வந்தவர்கள் தப்பி ஓடமுயன்றனர். பின்பு போலீசார் காரில் இருந்த நபரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது சென்னை,வேலூர்,உளுந்தூர்பேட்டை, ஆகிய பகுதிகளில், விலையுயர்ந்த பைக்களை திருடி மலிவு விலையில் விற்பனை செய்து தெரியவந்தது .
இது தொடர்பாக கே.கேநகரை சேர்ந்த மெக்கானிக்,மகேந்திரன் (எ)மகி 29,, மாங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (20),தள்ளு வண்டி வியாபாரம் செய்யும் ஜாபர்கான்பேட்டை லட்சுமணன், தொழுதூர் பகுதியை சேர்ந்த ரவி (22),ஆகியோர் கூட்டாக இணைந்து பைக்குகளை திருடி பெரம்பலூர் மாவட்டம் கிரனூர் பகுதியை சேர்ந்த சிவக்குமாரிடம் பாதி விலைக்கு விற்று வந்துள்ளனர்.
பைக் திருடும் வேலைகளை மெக்கானிக் மகேந்திரனும், வண்டியில் எண்களை மாற்றுவது ராஜேசும், இடத்தை தேர்வு செய்யும் பணிகளை லட்சுமணண், செய்துள்ளனர்.
கார் ஓட்டிக்கொண்டே நோட்டமிட்டு இடம் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தேர்வு செய்து திருடுவது இவர்களது வாடிக்கை . இதை யாரும் சந்தேகப்படாத வண்ணம் செய்துள்ளனர்.
வாகன சோதனையில் சிக்கியவர்களை விசாரித்த போது மேற்கண்ட தகவல்கள் தெரிய வர அவர்களிடமிருந்து 18 விலை உயர்ந்த மோட்டார் பைக் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மாருதி ஸ்விப்ட் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.